சம்பளம் வருமா? வராதா? நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கிகள் வேலைநிறுத்தம்
Author: Newstm Desk | Posted Date : 07:40 (29/05/2018) A+       A-

சம்பளம் வருமா? வராதா? நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கிகள் வேலைநிறுத்தம்

May 29


நாடு முழுவதும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்பட வேண்டும். வங்கி சங்கங்களின் கோரிக்கையான 2 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கைக்குச் சம்மதிக்காத நிலையில் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வங்கிகளின் வாராக் கடன் பிரச்னையால் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் கேட்கும் 2 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதையடுத்து, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் திட்டமிட்டப்படி நாளை மற்றும் நாளை மறுநாள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூடிய வேலை நடைபெறும் மாத கடைசி தினங்களில் வங்கிகள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது சம்பளம் கிடைப்பதில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் இந்த வேலைநிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும், ஏடிஎம்-களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாத சம்பளம் மாத இறுதியில் வருமா? வராதா? வந்தால் அதை எடுக்க முடியுமா? முடியாதா? என்பது ஈஎம்ஐ கட்டும் பலரையும் கலங்கவைக்கிறது.