எப்போதும் இளமையா இருக்கனுமா... அதிக உடற்பயிற்சி செய்யுங்க!
Author: Newstm Desk | Posted Date : 01:26 (27/05/2018) A+       A-

எப்போதும் இளமையா இருக்கனுமா... அதிக உடற்பயிற்சி செய்யுங்க!

May 27

ஆரோக்கியமான நீண்ட வாழ்வு வாழ வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையும். அதற்காக என்ன செய்வது என்பதுதான் தெரிவதில்லை. உணவு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்பது மருத்துவர்கள் சொல்லும் வழியாகும். அதிலும், ஒரு நாளைக்கு நான்கு - ஐந்து முறை உடற்பயிற்சி செய்பவர்கள் வாழ்நாள் கூடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆம், உடற்பயிற்சி செய்வது முதுமையைத் தாமதப்படுத்துகிறதாம். 

ஒருவர் ஒரு நாளைக்கு 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வதே போதுமானது. அதற்கு மேல் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்று இல்லை. அதற்கு மேல் செய்தாலும் தவறு இல்லை. இப்படித் தினசரி உடற்பயிற்சி (வாரத்துக்கு ஐந்து அல்லது ஆறு நாள் செய்தால் போதும்) செய்து வந்தால் நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைகிறது, நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது, ரத்தக் குழாய்களின் ஆயுள் அதிகரிக்கிறது, இதன்மூலம் உடல் முழுவதும் ரத்தம் சீரான விதத்தில் கொண்டு செல்லப்படுகிறது. 

இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் இளமையாக இருந்தாலேபோதும் எந்த ஒரு நோயும் நெருங்காது. உடற்பயிற்சி இன்றி, கண்ட குப்பை உணவுகளை உண்டுவந்தால், ரத்தக் குழாயில் கொழுப்புப் படிகிறது. இதயத்துக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. ரத்தம் தடைப்பட்டால் இதயத் திசுக்கள் உயிரிழக்கின்றன. இதையே மாரடைப்பு என்கிறோம். உடற்பயிற்சி செய்வது இந்தப் பாதிப்பை போக்குகிறது. 

இது தொடர்பாகத் தி ஜேர்னல் ஆஃ பிசியாலஜி இதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், ஆய்வாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட 102 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவர்களை நான்கு குழுவாகப் பிரித்துள்ளனர். முதல் குழுவுக்கு வாரத்துக்கு இரண்டு முறை உடற்பயிற்சி அளித்துள்ளனர். இரண்டாவது குழுவுக்கு வாரத்துக்கு மூன்றும், மூன்றாவது குழுவுக்கு வாரத்துக்கு 4-5 முறையும், நான்காவது குழுவினரை 6-7 நாளும் உடற்பயிற்சி செய்ய வைத்துள்ளனர். 

இவர்களை ஒரு மாதம் கண்காணித்துள்ளனர். ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், வாரத்துக்குக் குறைவாக உடற்பயிற்சி செய்தவர்களுக்கும் தலை, கழுத்துப் பகுதியில் நல்ல ரத்த ஒட்டம் இருப்பதைக் கண்டறிந்தனர். அதுவே, வாரத்துக்கு ஏழு நாளும் பயிற்சி செய்தவர்களுக்கோ, மிகப்பெரிய ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் அதிகரித்ததைக் கண்டறிந்தனர். உடல் முழுக்கச் சீரான ரத்த ஓட்டம் இருப்பது முதுமையைத் தாமதப்படுத்தும் என்பதால், அதிக உடற்பயிற்சி செய்வது முதுமையைத் தாமதப்படுத்தும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.