பிளேஆப் சென்ற அணிகளை விட மும்பை சிறந்த அணி: ரோகித் சர்மா
Author: Newstm Desk | Posted Date : 01:16 (30/05/2018) A+       A-

பிளேஆப் சென்ற அணிகளை விட மும்பை சிறந்த அணி: ரோகித் சர்மா

May 30

ஐபிஎல் தொடரில் பிளேஆப் சென்ற அணிகளை விட மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்தது என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்தாண்டு பிளேஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறியது அந்த அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அந்த அணியின் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் குறித்தும், டெஸட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்தும் ரோகித் சர்மா பேசியுள்ளார். 

அதில், " ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லையில் பாதியை நான் கடந்துவிட்டேன். எனவே இந்திய அணியில் இடம் கிடைக்கிறதா இல்லையா என்பதை பற்றிய கவலை எனக்கு இல்லை. இப்போது எனக்கிருக்கும் மனநிலை, வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தொடக்கத்தில் முதல் 5-6 வருடங்களுக்கு நம்மை அணியில் தேர்வு செய்வார்களா என்ற காத்திருப்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை எனக்கு இல்லை. இது விளையாட்டை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாட வேண்டிய நேரம். 

இந்தாண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. நான் எதிர்பார்த்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பிளேஆப் சென்ற அணிகளை விடவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் நாங்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டோம்" என்று கூறினார்.