தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தமிழக அரசு பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!
Author: Newstm Desk | Posted Date : 12:31 (30/05/2018) A+       A-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தமிழக அரசு பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

May 30


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த மாபெரும் போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை, உச்ச நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன. இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரிக்கப்பட்ட ஒரு மனுவில், மனுதாரர் தரப்பில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலர், முதன்மை செயலர், டிஜிபி ஆகியோர் நாளை மறுநாள் பதிலளிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.