தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி
Author: Newstm Desk | Posted Date : 12:31 (30/05/2018) A+       A-

தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி

May 30

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் இன்று நேரில் ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடியில் 22ந்தேதி நடந்த 100வது நாள் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கி சூடு நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். 

அதன் பின், அரசு தரப்பில் இருந்து துணை முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நேற்று தமிழக ஆளுநரும் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். 

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 48 பேரை ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கினார். 

ரஜினிகாந்த் வருகையையொட்டி அரசு மருத்துவமனையில் பலத்த பாதிகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ரஜினியை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அங்கு கூடி இருந்தனர். ரஜினி சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து பேசிய போது செய்தியாளர்களுக்கும், ரஜினியின் ரசிகர்களுக்கும் மருத்துவமனை உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் மருத்துவமனையில் இருந்து ரஜினி புறப்பட்டார். அவர் தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது உள்ள சூழலில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து பேச வேண்டாம் என்று போலீசார் ரஜினியிடம் கூறியதாகவும் தெரிகிறது. 

முன்னதாக தூத்துக்குடிக்கு செல்வதற்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "இந்த சம்பவத்தில் அரசியல்கட்சிகள் ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்வது சரியல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினால் எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று பேசினார்.