அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை
Author: Newstm Desk | Posted Date : 01:21 (30/05/2018) A+       A-

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை

May 30


தமிழக அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக்கண்டித்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களே எதிர்கட்சியினராக பங்கெடுத்து வருகின்றனர். 

மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டதின்படி தான் இயக்குவதால் அப்பள்ளியின் பெயர்களை 'தனியார் சுயநிதி கல்லூரிகள்' என பெயர் மாற்றம் வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ செம்மலை கேள்வி எழுப்ப, அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை தனியார் சுயநிதி பள்ளிகள் என மாற்றுவது தொடர்பாகவும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கவும் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிலளித்தார். 

"தமிழகத்தில் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது" என செம்மலை கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தங்கமணி, "மின்சார தேவைக்கான நிலக்கரி தேவையான அளவு தமிழக அரசிடம் கையிருப்பு உள்ளது" என பதிலளித்தார். 

எதிர்கட்சிகள் ஒருவர் கூட இல்லாமல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாதிரி சட்டசபை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.